பெங்களூரு, நவ. 17: கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் நிகழாண்டு நடத்தப்படும் தமிழ் புத்தக திருவிழாவுக்கான விளக்க குறிபேட்டை ஆர்பிஏஎன்எம்எஸ் கல்லூரி இயக்குனரிடம் சங்க நிர்வாகிகள் வழங்கினர்.
கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு 5வது தமிழ் புத்தக திருவிழா வரும் டிசம்பர் 18 முதல் 27ம் தேதி வரை 10 நாட்கள் பெங்களூரு அல்சூர் பகுதியில் உள்ள ராவ்பகதூர் ஆற்காடு நாராயணசாமி முதலியார் முதல் தரக் கல்லூரி (ஆர்பிஏஎன்எம்எஸ்) வளாகத்தில் உள்ள அரங்கில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தக திருவிழாவுக்கான பணிகள் நடந்து வருவதுடன், அதற்கான விளக்க குறிப்பேடுகளை முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி புத்தக திருவிழா விளக்க குறிப்பேட்டை ஆர்பிஏஎன்எம்எஸ் கல்லூரி இயக்குனர் டாக்டர் சஹானிதாஸிடம் சங்க தலைவர் ந.முத்துமணி, பொருளாளர் க.தினகரவேலு. பா.சு.மணி நூலக பொறுப்பாளர்கள் சங்கர்தாஸ், முனைவர் ரகுராம், ஊடகவியலாளர் சாய்ரமணா மற்றும் சிவகுமார் ஆகியோர் வழங்கினர். குறிப்பேடு பெற்று கொண்ட கல்லூரி இயக்குனர் புத்தக திருவிழா நடைபெற முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதியளித்தார். உடன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் சிவபிரியா உடனிருந்தார்.





























































