பெங்களூரு, நவ. 16: பெங்களூர் வசந்த்நகரில் தாய்மொழி கூட்டமைப்பு சார்பில் கர்நாடக உணவு மற்றும் பொதுவழங்கல் துறை அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத்திற்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவை தாய் மொழி கூட்டமைப்பு தலைவர் எஸ்.டி.குமார் தலைமை தாங்கி நடத்தினார்.
விழாவுக்கு வருகை தந்த அமைச்சருக்கு தமிழ் பாரம்பரிய நடனம், சிலம்பாட்டம் நடத்தி வரவேற்கப்பட்டது. நம்மூர் தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ் மரபு நடனம் நடைபெற்றது. அமைச்சருக்கு தாய் மொழி கூட்டமைப்பு சார்பில் சால்வை, மாலை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கர்நாடக மாநில திராவிடர் கழகம், கர்நாடக மாநில திராவிடர் முன்னேற்றக் கழகம்,

கர்நாடக மாநில அதிமுக, தங்கவயல் தமிழ் சங்கம், கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம், தங்கவயல் நாம் தமிழர் கலை இலக்கிய பாசறை, திருவள்ளுவர் சங்கம், ஜடிஜ தமிழ் மன்றம், எச்ஏஎல் தமிழ் மன்றம், ஆதர்ஷ ஆட்டோ ஓட்டுநர் சங்கம் , கர்நாடக பறையர் பேரவை, கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் உள்பட 25க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் அமைச்சருக்கு சால்வை, மாலை, மைசூர் தலைபகை, பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து அமைச்சரிடம் தாய் மொழி கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதில் கர்நாடக மாநில அரசின் சார்பில் 37 மகான்களின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. அந்த வரிசையில் அய்யன் திருவள்ளூர் பிறந்த நாள் விழாவையும் மாநில அரசின் சார்பில் கொண்டாட வேண்டும். பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையில் மாநில அரசின் சார்பில் கடந்த 2009 ஆகஸ்ட் 9ம் தேதி அய்யன் திருவள்ளூர் சிலை திறந்து வைக்கப்பட்டது. ஆகவே மாநில அரசின் சார்பில் திருவள்ளூர் பிறந்த நாள் விழா கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

விழாவில் ஜி. யு. போப் எழுதிய திருக்குறள் ஆங்கில உரை நூலை எஸ். டி. குமார் வெளியிட கர்நாடக மாநில திராவிடர் கழக மூத்த தலைவர் ஜானகிராமன் பெற்று கொண்டார். அதை தொடர்ந்து பெங்களூரு மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவராக பொறுப்பு ஏற்றுள்ள ஜெ. சரவணனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.





























































