பெங்களூரு, டிச. 17: இளம் தலைமுறையினரிடம் திருவள்ளுவரை வைரல் ஆக்குவது நமது உடைமை மற்றும் கடமை என்று கவிஞர், ஓவியர், எழுத்தாளர் மமதி சாரி தெரிவித்தார்.
பெங்களூரில் சனிக்கிழமை அவர் தமிழில் எழுதிய “குட்டிகள் குறள்” மற்றும் ஆங்கிலத்தில் எழுதிய தி சம்மர் ஆஃப் ஹீரோஸ் ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டது. இதில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பல நூற்றாண்டிற்கு முன் தமிழராய் பிறந்த புலவரே வள்ளுவர். இவரைப் பற்றி வாய்வழி வந்த பல சுவாரசியமான கதைகள் உள்ளன. அவர் எழுதியவற்றில் என்றென்றும் தமிழர் பெருமையாய், இந்தியர் பொக்கிஷமாய், உலகிற்கே வழிகாட்டியாய் திகழ்வது அவரது குறள்.
1330 ஈரடி செய்யுள் கொண்ட தொன்மையான இத்தமிழ் நூல், மூன்று பகுதிகள் கொண்டது. முதல் இரண்டு பகுதிகளில் வாழ்க்கையைச் சீராக வாழ்வதற்கான அனைத்தையும் திருவள்ளுவர் எழுதியுள்ளார். இவை, அறத்துப்பால் மற்றும் பொருட்பால் மூன்றாவது பகுதி, காமத்துப்பால், அதன் பெயர் விளக்குவதைப் போலவே காதலர்களுக்கான வழியையும் எச்சரிக்கைகளையும் கொண்டது.
குழப்பத்திலும் கவலையிலும் ஆழ்வதும், அதிலிருந்து மீண்டு வர வழி தெரியாமல் தவிப்பதும் மானிட இயல்பு. ஆனால், குறளைக் கடைபிடித்து, வள்ளுவர் வழியில் வாழ்ந்தால், துயரத்தை தவிர்க்கலாம். அதில் தொலைந்திருந்தாலும் எளிதாய் மீளும் வழியை காணலாம்.
பள்ளி தேர்வின் கேள்விகளுக்கான பதில்கள் கையில் இருந்தால் எப்படி இருக்கும்? வாழ்க்கை எனும் தேர்வின் வினாக்களுக்கான விடைகள் அனைத்தும் குறளில் உள்ளன. முப்பாலவர்க்கும், சாதி, மதம், பொருளாதார நிலை, சமூக ஏற்றத்தாழ்வு, பதவி, செல்வாக்கு, நாடு, மொழி, இவை எதுவும் பொருளின்றி நடுநிலையான ஒரு வாழ்க்கை முறையே ஆகும் குறள்.
இப்படி வாழ்க்கைக்குக் கலங்கரைவிளக்கமாக நிற்கும் அவரை திருவள்ளுவர் என்றும், செப்பமுடைய அவரது நூலை திருக்குறள் எனவும் அழைக்கிறோம். முதல் இரண்டு பகுதிகளில் வரும் குறள்களைக் கருவிகளாய் கொண்டு, சிறுவயதிலிருந்தே வள்ளுவத்தைப் பயின்று, அதன் வழிவாழ்பவருக்குக் தடைக்கற்கள் வெறும் தூசாய்கூட இருக்காது.
கதை, விடுகதை, நகைச்சுவை, பரிசோதனை, எடுத்துக்காட்டு போன்றவை சிறுவருக்குப் பிடிக்கும். பிடித்ததைப் படிக்கும் பொழுது, கற்றல் தானாய் நடக்கும். ஆதலால், இவற்றைக் கொண்டு, “குட்டிகள் குறள்” என்னும் புத்தகத்தை, வயதாலும் உள்ளத்தாலும் இளம் வாசகர்களுக்காக நான் எழுதி உள்ளேன்.
வள்ளுவம் எனும் இன்பத்தை இவ்வையகமே பெற, இப்புத்தகத்தை படித்து உள்வாங்கிய பின், நண்பரோடு பகிருங்கள். ஏனெனில், வள்ளுவரை வைரலாக்குவது நம்முடைய உடைமை மற்றும் கடமை.
தமிழ் தெரிந்த தமிழ் பிள்ளைகள், தமிழ் தெரியாத தமிழ் பிள்ளைகள், தமிழர் அல்லாத இந்தியப் பிள்ளைகளிடம் திருக்குறளை கொண்டு செல்ல வேண்டும். தொன்மையான மொழிகள் பல இருந்தாலும், இந்தியாவின் சிறந்த மொழிகளாக தமிழும், சமஸ்கிருதமும் உள்ளன. இதில் எது சிறந்தது என்று வாதிப்பதை விட, அவற்றில் உள்ள சிறந்ததை எடுத்துக் கொண்டு, அனைவரிடத்திலும் பரப்ப வேண்டும் என்றார்.
மேலும் இப்புத்தகத்தில் முக்கிய கதாபாத்திரிமாக கெட்டிக்குட்டி விளங்குகிறார். கெட்டிக்குட்டி, பையனா, பொண்ணா?. இந்தக் கேள்விக்கான விடை ஒவ்வொரு வாசகரின் எண்ணத்தைப் பொறுத்து மாறுபடும். “அர்” எனும் பின்னிணைப்பு, உயர்வு நவிற்சி மற்றும் பன்மையைக் குறிப்பிடும். மதிப்போடு ஒருவரைப் பற்றிப் பேசும்பொழுது, அவர் ஆணோ, பெண்ணோ, மூன்றாம் பாலினர்- திருநர் என்றோ பயன்படுத்தவேண்டும். அதுவே தமிழர்க்கு, தமிழருக்கு அழகு. அவர். இவர். பொன்ற சொற்களும் இதில் சேரும். எடுத்துக்காட்டிற்கு, உங்களைக் குறிக்கும் ஒரு சொல்லைப் பார்ப்போம்.
சிறுவன் – ஆண் குழந்தையை மட்டும் குறிப்பிடும். சிறுமி – பெண் குழந்தையை மட்டும் குறிக்கும். சிறுவர் –
- மதிப்போடு ஒரு ஆண் குழந்தையைக் குறிப்பிடும் அல்லது மதிப்போடு ஒரு பெண் குழந்தையைக் குறிப்பிடும்.
- குழுமியிருக்கும் குழந்தைகளின் கூட்டத்தைக் குறிப்பிடும். அவை ஆண் குழந்தைகளின் குழுவாக இருக்கலாம், அல்லது, பெண் குழந்தைகளை மட்டுமே கொண்ட குழுவாக இருக்கலாம்.
- ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருவருமே கலந்திருக்கும் குழுவைக் குறிப்பிடுவதற்கும் இந்தச் சொல்லே பயனாகும்.
இனி, நீங்க எந்தப் பின்னிணைப்பை பயன்படுத்துவீங்க? “. அர்!” என உங்க குரல் உரக்கக் கேட்கிறது. இப்போ சொல்லுங்க, கெட்டிக்குட்டி ஆண் குழந்தையா, பெண் குழந்தையா? நீங்க கருதுவதே உண்மை. வாய்ப்பாடம் செய்வது கற்றல் ஆகாது. பொருளைப் புரிந்து, சுவைத்து, உணர்ந்து கற்பவை மட்டுமே என்றும் உள்ளத்தில் நிற்கும். இதனோடு இணைந்து சில விடயங்களை வாய்ப்பாடமும் செய்தால் என்றும் உங்களுக்குத் தடையிடும் எல்லைகளே இருக்காது. அனைவரும் வாருங்கள், இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கெட்டிக்குட்டியோடு இணைந்து வள்ளுவத்தை ரசிப்போம் என்றார்.